அந்த வீரருக்கு ரோகித் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்- டி வில்லியர்ஸ் நம்பிக்கை
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது
கேப்டவுன்,
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
ரஜத் பட்டிதார் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத தொடரைக் கொண்டுள்ளார். ஆனால் இது போன்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே இந்த இந்திய அணியின் நல்ல அம்சம் மற்றும் கலாச்சாரமாகும். ஏனெனில் இத்தொடரில் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன.
ஒருவேளை ரஜத் பட்டிதாரின் அணுகுமுறை மற்றும் உடைமாற்றும் அறையில் அவருடைய கேரக்டர் பிடிக்கும் அளவுக்கு இருந்தால் ரோகித் மற்றும் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள். அதனால் இந்த தொடரில் ரன்கள் அடிக்காவிட்டாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள்.
இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.