ரோகித், கில் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 386 ரன் இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா...!


ரோகித், கில் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 386 ரன் இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா...!
x

Image Courtesy: AFP   

இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இந்தூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களம் புகுந்தனர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டிய இவர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மைதானமும் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது.

அதிரடியாக ஆடிய இவர்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விரட்டினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ஒரே ஒவரில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தனர். சதம் அடித்திருந்த நிலையில் ரோகித் 101 ரன்னிலும், கில் 112 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கோலி 26 ரன், இஷன் கிஷன் 17 ரன், சூர்யகுமார் யாதவ் 14 ரன் வாஷிங்டன் சுந்தர் 9 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் 26 ஓவரில் 212 ரன் என்றிருந்த இந்தியாவின் ஸ்கோர் மளமளவென விக்கெட்டுகள் வீழ்ந்ததும் ரன்னும் குறைந்தது. இறுதி கட்டத்தில் சிறிது நேரம் அதிரடி காட்டிய பாண்ட்யா 37 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் 101 ரன், சுப்மன் கில் 112 ரன், பாண்ட்யா 54 ரன் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் பிளெய்ர் டிக்னர், ஜேக்கப் டல்ப்பி தலா 3 விக்கெட்டும், மைக்கேல் பிரேஸ்வெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.


Next Story