ரிஷப் பண்ட் தான் தற்போதைய 3வது வரிசை வீரர் - இந்திய பேட்டிங் பயிற்சியாளர்


ரிஷப் பண்ட் தான் தற்போதைய 3வது வரிசை வீரர் - இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
x

Image Courtesy: AFP

கடந்த சில போட்டிகளாகவே அவர் விளையாடி வரும் விதம் மூன்றாவது இடத்தில் அவரை நீடிக்க வைக்க உதவுகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் வரும் 9ம் தேதி பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் வெளியில் அமர வைக்கப்பட்டு ரோகித் சர்மாவுடன் விராட் கோலி துவக்க வீரராக விளையாடி வருவதோடு மூன்றாவது வீரராக ரிஷப் பண்ட் விளையாடி வருவது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் தான் எங்கள் அணியின் தற்போதைய 3வது வரிசை வீரர் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் தான் எங்கள் அணியின் தற்போதைய 3வது வரிசை வீரர். அவர் அந்த இடத்தில் மிகவும் நன்றாக பேட்டிங் செய்கிறார். கடந்த சில போட்டிகளாகவே அவர் விளையாடி வரும் விதம் மூன்றாவது இடத்தில் அவரை நீடிக்க வைக்க உதவுகிறது.

மூன்றாவது வீரராக ரிஷப் பண்ட் களம் இறங்கும்போது டாப் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரர் கிடைக்கிறார். அது மட்டுமின்றி கூடுதல் ஆல்ரவுண்டர்களும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வசதி கிடைக்கிறது. அதன் காரணமாகவே ரிஷப் பண்ட் மூன்றாவது வீரராக களமிறங்கி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story