இதுபோன்ற ஆட்டம் கடைசியாக எப்போது நடந்தது என எனக்கு நினைவில்லை - ரோகித் சர்மா


இதுபோன்ற ஆட்டம் கடைசியாக எப்போது நடந்தது என எனக்கு நினைவில்லை - ரோகித் சர்மா
x
தினத்தந்தி 18 Jan 2024 3:34 AM IST (Updated: 18 Jan 2024 6:10 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

பெங்களூரு,

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. இரு அணிகளின் ரன்களும் சமன் அடைந்ததால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது. முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியாவும் 16 ரன்கள் எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், அணிக்கு ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தேவை. கடந்த சில தொடர்களில் ரிங்கு சிங் விளையாடி வருகிறார். பேட்டிங்கில் என்ன செய்யமுடியும் என்பதை ரிங்கு சிங் காட்டினார். இந்திய அணிக்காக ரிங்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இதுபோன்ற ஆட்டம் கடைசியாக எப்போது நடந்தது என எனக்கு நினைவில்லை. ஐபிஎல் தொடரில் ஒரு ஆட்டத்தில் நான் 3 முறை பேட்டிங் செய்தேன். பாட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியம். அதிரடியாக ஆடுவதை விட்டுவிடக்கூடாது என நானும், ரிங்கு சிங்கும் பேசிக்கொண்டோம். இது எங்களுக்கு மிகச்சிறந்த ஆட்டம். இதில் அழுத்தம் இருந்தது. களத்தில் நீண்ட நேரம் விளையாடுவதும், அதிரடியாக ஆடுவதும் முக்கியம்' என்றார்.


Next Story