ரஞ்சி டிராபி கிரிக்கெட்; கர்நாடகத்திற்கு எதிராக முதல் இன்னிங்சில் 151 ரன்களில் சுருண்ட தமிழகம்
கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய்குமார் வைஷாக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சென்னை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரவிக்குமார் சமர்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன், சமர்த் 57 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார்.
இறுதியில் கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்சில் 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் படிக்கல் 151 ரன் அடித்தார். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி கர்நாடகாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தமிழகம் தரப்பில் விமல் குமார் 14 ரன், ஜெகதீசன் 40 ரன், பிரதோஷ் பால் 5 ரன், சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன், விஜய் சங்கர் 6 ரன், பூபதி குமார் 8 ரன், சாய் கிஷோர் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 56 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தமிழக அணி தரப்பில் இந்திரஜித் 35 ரன், முகமது 3 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழக அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய்குமார் வைஷாக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக இந்திரஜித் 48 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா 36 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை கர்நாடகம் 299 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.