ரஞ்சி டிராபி கிரிக்கெட்; முதல் நாள் முடிவில் மும்பை 45/2
ரஞ்சி கோப்பை தொடரின் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் தமிழகம் - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு வீரர்கள், மும்பை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணி வீரர்கள் சாய் சுதர்சன் 0, ஜெகதீசன் 4 , ரஞ்சன் பால் 8 , இந்திரஜித் 11 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
100 ரன்களையாவது தொடுமா என்ற நிலையில் இருந்த தமிழக அணியை விஜய் சங்கர் - வாஷிங்டன் சுந்தர் இணை கொஞ்சம் மீட்டெடுத்தனர். விஜய் சங்கர் 44 ரன்களிலும், சுந்தர் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.