ரஞ்சி டிராபி கிரிக்கெட்; நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பஞ்சாப் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 141/4
தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சேலம்,
89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப்புடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்திருந்தது. பாபா இந்திரஜித் 122 ரன்களுடனும், விஜய் சங்கர் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 131.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 435 ரன்கள் குவித்தது. தமிழக அணி தரப்பில் இந்திரஜித் 187 ரன்னும், விஜய் சங்கர் 130 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து பஞ்சாப் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 24 ரன்னிலும் , அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய அன்மோல்பிரித் சிங் 41 ரன், நேஹால் வதேரே 43 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து மந்தீப் சிங் மற்றும் அன்மோல் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் மந்தீப் சிங் 18 ரன்னுடனும், அன்மோல் மல்ஹோத்ரா 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் தரப்பில் அஜித் ராம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.