கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விக்கெட் மழை: ஒரேநாளில் வீழ்ந்த 23 விக்கெட்டுகள்


கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விக்கெட் மழை: ஒரேநாளில் வீழ்ந்த 23 விக்கெட்டுகள்
x

முதல் நாள் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்கள் முதல்-இன்னிங்சை முடித்துக்கொண்டன.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் தடுமாற்றத்துடனே பேட்டிங்கை தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 153 ரன்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் அடுத்த 6 விக்கெட்டுகளை ரன் எதுவும் அடிக்காமல் இழந்து ஆல் அவுட் ஆனது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபடா, நிகிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது கடைசி இன்னிங்சை விளையாடிய எல்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத மோசமான சாதனையை செய்துள்ளது. இதன்படி ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் கடைசி ஐந்து பார்ட்னர்ஷிப்களில் குறைந்த ரன் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி செய்துள்ளது.

முன்னதாக 1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஐந்து பார்ட்னர்ஷிப்களில் 3 ரன்கள் சேர்த்து இருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. அதை முறியடித்து யாரும் முறியடிக்க முடியாத சாதனையை இந்திய அணி செய்துள்ளது.

இதனிடையே இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் இரண்டு அணிகளிலும் சேர்த்து 23 விக்கெட்கள் விழுந்துள்ளன. டெஸ்ட் போட்டி வரலாற்றில் முதல் நாளில் அதிக விக்கெட் பட்டியலில் இது இரண்டாவது இடம் பிடித்தது. முன்னதாக 1902-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டியின் முதல் நாளில் 25 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டது முதல் இடத்தில் உள்ளது.

முதல் நாள் ஆட்டத்திலேயே இரு அணிகளிலும் தங்கள் முதல்-இன்னிங்சை முடித்துக்கொண்டன. நாளை நடைபெற உள்ள 2வது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை விரைவில் ஆல் அவுட்டாக்கி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இந்திய அணி அதிகரிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story