18 வருட தோனி சாதனையை முறியடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ்...!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குர்பாஸ் 151 ரன்கள் எடுத்தார்.
கொழும்பு,
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 300 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து 301 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குர்பாஸ் 151 ரன்கள் எடுத்ததன் மூலம் தோனியின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் . அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக தோனி கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 148 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த 18 ஆண்டு கால சாதனையை குர்பாஸ் நேற்று முறியடித்தார்.