பஞ்சாப் அதிரடி பேட்டிங்: ஐதராபாத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்
பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் அடித்தார்.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 69-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் - அதர்வா டைடே அதிரடியாக விளையாடி அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதர்வா 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பிரப்சிம்ரனுடன் ரோசோவ் கை கோர்த்தார். இருவரும் அதிரடியில் மிரட்டினர். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷசாங்க் சிங், அசுதோஷ் சர்மா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து ரோசோவும் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் வேகம் இறுதி நேரத்தில் கொஞ்சம் குறைந்தது. இருப்பினும் கேப்டன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 32 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் குவித்தார். ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஐதராபாத் பேட்டிங் செய்ய உள்ளது.