பத்ம பூஷண் விருதை, விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய பிரேமலதா
விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்.
சென்னை,
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2-ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கெளரவித்தார்.அப்போது விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார். விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பினார்.
தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற பிரேமலதா, பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தினார்.