பவர் பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது - தோல்விக்கு பின் ரிஷப் பண்ட் பேட்டி
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டெல்லி,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது,
டாசில் பவுலிங் செய்வதாக முடிவு எடுத்ததற்கு பின் பனிப்பொழிவு வரும் என்று நினைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை போல் எந்த பனிப்பொழிவும் வரவில்லை. ஆனால் நாங்கள் ஐதராபாத் அணியை 220 முதல் 230 ரன்களுடன் கட்டுப்படுத்தி இருந்தால், எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை பவர் பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள் 125 ரன்களை விளாசினார்கள். அதன்பின் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. அதேபோல் நாங்கள் பேட்டிங் செய்யும் போது பிட்சில் பந்து நன்றாக நின்று வந்தது. ஆட்டம் தொடங்கும் முன் 260 முதல் 270 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
இதுபோன்ற நேரங்களில் தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்க வேண்டும். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் திட்டங்களுடன் தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும். மெக்குர்க் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடினார். அடுத்தடுத்த போட்டியில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை சரி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.