ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனு!


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனு!
x

image courtesy; AFP + ICC

உலக கோப்பையின் மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

லக்னோ,

இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. ஏற்கனவே 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்த செயல் வைரலாகியது. அவர் இரண்டு கால்களையும் தூக்கி வெற்றி பெற்ற கோப்பையின் மீது வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலானது.

இதனை முதலில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும், அடுத்தடுத்து வைரலாக பல்வேறு தளங்களிலும் பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் அலிகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் ஆன பண்டிட் கேசவ், உலக கோப்பையின் மீது கால் வைத்திருந்த மிட்செல் மார்ஷ் மீது உத்தரப்பிரதேசத்தின் அலிகர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், ' உலக கோப்பையை அவமதிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் பதிவிட்ட புகைப்படம், 140 கோடி இந்திய மக்களையும் புண்படுத்தும் செயலாக உள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த புகாரின் நகலை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள பண்டிட் கேசவ், மிட்செல் மார்ஷ்க்கு இந்தியாவில் விளையாட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story