பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் 'டிரா': உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அணிகளின் தற்போதைய தரவரிசை...!


பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அணிகளின் தற்போதைய தரவரிசை...!
x

Image Courtesy : PTI 

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.

துபாய்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதையடுத்து ஜனவரி 2 அன்று தொடங்கிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 131 ஓவர்களில் 449 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து 41 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது. அந்த அணி 82 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 319 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி கடைசி நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.

இந்த தொடர் நிறைவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலை ஐசிசி புதிதாக வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்நிலையில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த்தையொட்டி புதிய புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியா (78.57%) முதல் இடத்திலும், இந்தியா (58.93%) 2வது இடத்திலும், இலங்கை (53.33%) 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (50%) 4வது இடத்திலும், இங்கிலாந்து (46.97%) 5வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (40.91%) 6வது இடத்திலும், பாகிஸ்தான் (38.1%) 7வது இடத்திலும், நியூசிலாந்து (27.27%) 8வது இடத்திலும், வங்காளதேசம் (11.11%) 9வது இடத்திலும் உள்ளன.

தற்போதைய புள்ளிபட்டியலின் அடிப்படையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்ப்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது.


Next Story