ஒரு சில காரணங்களால்தான் நமது அணி பின்னடைவை சந்தித்துள்ளது - பாக்.முன்னாள் வீரர்


ஒரு சில காரணங்களால்தான் நமது அணி பின்னடைவை சந்தித்துள்ளது - பாக்.முன்னாள் வீரர்
x

image courtesy: AFP

பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் தற்போது வங்காளதேச அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் தற்போது அந்த அணியின் செயல்பாடு குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருக்கு கூறுகையில் : சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் சொந்த மண்ணில் நடக்கும் எந்த தொடரையும் வெல்ல முடியாது. கடந்த 3-4 ஆண்டுகளாகவே நமது அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக கிடையாது. பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது சில சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர். ஆனால் அவரும் அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கவில்லை. அரபு அமீரகத்தில் விளையாடியபோது நமது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் அங்கு டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

ஏற்கனவே நமது அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் வலிமையாக இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் முன்பை விட சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதில்லை. இந்த ஒரு சில காரணங்களால்தான் தற்போது நமது அணி பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த குறையை நீக்கி மீண்டும் அணியை பலப்படுத்தவில்லை என்றால் இனியும் தோல்விகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story