ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் தொடர்ந்து முதலிடம்
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (692) முதலித்தில் தொடருகிறார்.
துபாய்,
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (863 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் (759) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் (745) 3-வது இடத்துக்கு சரிந்தார்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா 2 இடங்கள் ஏற்றம் கண்டு முறையே 8-வது, 9-வது இடத்தை பெற்றுள்ளனர். பேட்டிங்கில் டாப்-10 வரிசைக்குள் 3 இந்தியர்கள் இடம் பிடித்து இருப்பது 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். இந்திய வீரர்களில் லோகேஷ் ராகுல் 10 இடம் அதிகரித்து 37-வது இடத்தையும், இஷான் கிஷன் 2 இடம் உயர்ந்து 22-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (692) முதலித்தில் தொடருகிறார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் (666) ஒரு இடம் உயர்ந்து ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்குடன் (666) இணைந்து 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 12-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.