தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை போட்டி தான் எனது இலக்காகும் - ஷிகர் தவான்
2023 உலக கோப்பைக்கு தயாராக நல்ல உடற்தகுதியுடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க விரும்புகிறேன் எனக் கூறினார்.
லக்னோ,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
இந்தியாவின் முன்னனி வீரர்கள் டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் படி இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
'எனது கிரிக்கெட் வாழ்க்கை அழகானதாக அமைந்து இருக்கிறது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ? அப்போது எனது ஆலோசனைகளை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன். தற்போது எனக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் எப்போதும் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளில் அனுபவித்து செயல்படுவேன். தற்போது அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை போட்டி தான் எனது இலக்காகும். அந்த போட்டிக்கு நல்ல உடல் தகுதியுடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'
இவ்வாறு அவர் கூறினார்.