பும்ரா இல்லை...அவர்தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் - பிரையன் லாரா


பும்ரா இல்லை...அவர்தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் - பிரையன் லாரா
x

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு மிக அருகே சென்றபோது, அவர் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியின் போக்கை மாற்றி அமைத்தது. அவரது பந்துவீச்சு அனைவரது மத்தியிலும் பாராட்டப்பட்டு வரும் வேளையில் அவரே உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா இல்லை என்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரின் புள்ளி விவரங்கள் மிகவும் அற்புதமானவை. இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதனைகளை செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனநிலை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனாலும் தற்போது அவர் அவரது கெரியரின் இறுதியில் நிற்கிறார். தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கும் அவர் தற்போதைய மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. என்னை பொருத்தவரை அவரே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்" என்று கூறினார்.

வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story