ஆஸ்திரேலியா குறித்து கவலையில்லை...அந்த போட்டியில்தான் எங்களின் முழு கவனம் உள்ளது - பட்லர்


ஆஸ்திரேலியா குறித்து கவலையில்லை...அந்த போட்டியில்தான் எங்களின் முழு கவனம் உள்ளது - பட்லர்
x

இங்கிலாந்தை வெளியேற்றுவதற்காக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் திட்டத்துடன் விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்திருந்தார்.

ஆண்டிகுவா,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி முதல் 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வியும், மற்றொன்று மழையால் கைவிடப்பட்ட நிலையிலும் 1 புள்ளி பெற்றிருந்தது. இதனையடுத்து அந்த அணி தனது 3-வது போட்டியில் ஓமனுடன் இன்று மோதியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஓமனை 47 ரன்களில் ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து, இலக்கை வெறும் 3.1 ஓவர்களில் கடந்து இமாலய வெற்றி பெற்றது. அதன் காரணமாக +3.081 என்ற அற்புதமான ரன் ரேட்டையும் இங்கிலாந்து பெற்றுள்ளது. அதனால் இங்கிலாந்து தங்களுடைய கடைசி போட்டியில் நமீபியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா அதனுடைய கடைசி போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது.

ஆனால் இங்கிலாந்தை வெளியேற்றுவதற்காக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் திட்டத்துடன் விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா என்ன செய்யும் என்பதை பற்றி கவலையில்லை, நமீபியா போட்டியில் பெரிய வெற்றியை பெறுவதே தங்களுடைய வேலை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"விக்கெட்டுகளை எடுத்து ஓமனை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்திய எங்களுடைய பவுலர்கள் வெற்றிக்கான அடித்தளமிட்டனர். எங்களுக்கு 2 நாட்களில் மிகப்பெரிய போட்டி உள்ளது. இப்போட்டியின் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருந்தது. அங்கே நல்ல லைன், லென்த்தை பின்பற்றி எங்களுடைய பவுலர்கள் பந்து வீசினர். அதில் கொஞ்சம் சுழலும் இருந்தது. அது இப்படி இருக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதில் அடில் ரஷித் நன்றாக பந்து வீசினார். ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதை பற்றி நாங்கள் பேசினோம். இந்த வெற்றியால் நாங்கள் மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் செல்கிறோம். ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா போட்டியை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் மீது கவனம் செலுத்துகிறோம். நமீபியாவுக்கு எதிராக நடைபெறும் அந்த போட்டியில்தான் எங்களுடைய கவனம் இருக்கிறது" என்று கூறினார்.


Next Story