டி20 உலகக்கோப்பையை தோனி வெல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... அதேபோல கெய்க்வாட்டும்...- சேவாக்


டி20 உலகக்கோப்பையை தோனி வெல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... அதேபோல கெய்க்வாட்டும்...- சேவாக்
x
தினத்தந்தி 10 April 2024 2:51 PM IST (Updated: 10 April 2024 4:25 PM IST)
t-max-icont-min-icon

2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கேப்டனாக தோனி இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சி.எஸ்.கே. அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கேப்டனாக தோனி இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிட்டத்தட்ட தோனியைபோலவே ருதுராஜ் கெய்க்வாட்டும் கேப்டன்ஷிப் பொறுப்பில் அமைதியாக செயல்பட்டு வெற்றிகளை கொண்டு வருவதாக சேவாக் பாராட்டியுள்ளார். எனவே தோனிக்கு பின் சி.எஸ்.கே. அணியை வழி நடத்துவதற்கு அவர்தான் பொருத்தமானவர் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

அதனால் இப்படியே செயல்பட்டால் தோனிபோல கோப்பையை வெல்லும் தகுதியை ருதுராஜ் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு:-"2021-லேயே ருதுராஜ் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று நான் கணித்தேன். ஏனெனில் அவர் அந்த அறிகுறிகளையும் திறன்களையும் காட்டினார். நீங்கள் வெற்றிகளை அடிப்படையாக வைத்து அவரை கேப்டனாக பார்க்கலாம் அல்லது அவரிடம் கேப்டன்ஷிப் திறன் இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.

என்னை பொறுத்தவரை அவரிடம் அந்த இரண்டும் இருக்கிறது. முதலில் 2007 டி20 உலகக் கோப்பையை தோனி வெல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதை வென்றதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. அதனால் தோனியை ஒருநாள் கேப்டனாகவும் நியமிப்பது பற்றி அவர்கள் பேசினார்கள்.

கெய்க்வாட் விஷயத்திலும் அதேபோல இருக்கிறது. அவருடைய தலைமையில் வெற்றிகள் நிறைய வரும். அவர் களத்தில் கூலாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான அறிகுறிகளை காட்டியுள்ளார். மேலும் அவர் பவுலர்களை நன்றாக பயன்படுத்துகிறார். எனவே அவர்தான் தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக செயல்பட தகுதியான சிறந்த வீரர்" என்று கூறினார்.


Next Story