சிக்சர் மழையுடன் சதமடித்த டி காக் - வாணவேடிக்கை காட்டிய ராகுல் : லக்னோ அணி 210 ரன்கள் குவிப்பு


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 18 May 2022 9:22 PM IST (Updated: 19 May 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் - டி காக் ஜோடி 4 சிக்சர்களை விளாசினர்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.

நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ள போதும் இன்று வெற்றி பெறும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யும். அதே நேரத்தில் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் - குயின்டன் டி காக் களமிறங்கினர்.

பவர் பிளே முதலே இருவரும் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக குயின்டன் டி காக் சிக்சர் மழை பொழிந்தார். இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

150 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். டி காக் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய இந்த ஜோடி விக்கெட்டை விடாமல் அதிரடி காட்டினர்.

சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் - டி காக் ஜோடி 4 சிக்சர்களை விளாசினர். இறுதி ஓவரை ரசல் வீச அந்த ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார்.

இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 211 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.


Next Story