வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து நவ்தீப் சைனி விலகல்- அதிகாரபூர்வ அறிவிப்பு
வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி வயிற்று தசையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுகிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியின் போது பந்து தாக்கி இடதுகை பெருவிரலில் காயமடைந்தார். இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் மற்றும் முதலாவது டெஸ்டில் விளையாடாத அவர் மும்பை திரும்பி சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் மிர்புரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'காயத்தில் இருந்து ரோகித்சர்மா முழுமையாக குணமடைய இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று மருத்துவ கமிட்டி தெரிவித்துள்ளது. எனவே அவர் 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார். காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளை தொடர்ந்து மேற்கொள்வார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி வயிற்று தசையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுவதால் அவரும் 2-வது டெஸ்டுக்கான அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.