எனது கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்ட்யா
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறின.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது.
இந்த நிலையில் இன்று தனது கடைசி ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்ளும் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது கேப்டன்சி குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எனது கேப்டன்சி மிகவும் எளிமையானது என்று நான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்ட்யா அணியில் உள்ள 10 பேருடன் சேர்ந்து விளையாடுகிறார் அவ்வளவுதான். இந்த மந்திரம் மிகவும் எளிமையானது. நீங்கள் நம்பிக்கையையும், அன்பையும் கொடுக்க வேண்டும். அவர்கள் வெளியேறி 100 சதவீதம் கொடுப்பார்கள். மேலும் நான் கேப்டனாக வெற்றி, தோல்வி பற்றி முடிவுகளை பார்க்கக் கூடியவன் கிடையாது.
வீரர்கள் என்ன மாதிரியான அணுகு முறையை காட்டுகிறார்கள்...? என்றுதான் பார்க்கிறேன். அந்த அணுகுமுறை அணிக்கு உதவி செய்யக் கூடியதாக இருக்கும? என்று பார்க்கிறேன். இதுதான் எனது கேப்டன்சி பாணி. இவ்வாறு அவர் கூறினார்.