இன்று என்னை நினைத்து அம்மா பெருமைப்படுவார் - ஆட்ட நாயகன் ரியான் பராக்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஜெய்ப்பூர்,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் குவித்தார். பின்னர் சேசிங் செய்த டெல்லி முடித்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்டு வந்த அவர் கிண்டல்களுக்கு உள்ளானார். இருப்பினும் இந்த வருடம் பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியில் 43 (29) ரன்கள் அடித்து தற்போது ஆட்டநாயகன் விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை போன்ற சமீபத்திய உள்ளூர் தொடரில் விளையாடி பெரிய ரன்கள் அடித்ததுதான் பார்முக்கு வர உதவியதாக ரியான் பராக் கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "அம்மா இங்கே இருக்கிறார். அவர் 3 - 4 வருடங்களாக என்னுடைய தடுமாற்றங்களை பார்த்தவர். இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார். என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும். அது நான் 0 ரன்கள் எடுக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி எப்போதும் மாறாது.
இந்த வருடம் எனக்கு எனக்கு உள்ளூர் தொடர் அபாரமானதாக அமைந்தது. அது தற்போது உதவுகிறது. சில நேரங்களில் டாப் 4 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்களும் விளையாட வேண்டும். பிட்ச்சில் பந்து மெதுவாக நின்று வந்தது. கடந்த போட்டியில் சஞ்சு பையா அப்படி விளையாடினார். நான் கடினமாக வேலை செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.