கேட்ச்களை தவறவிட்டது போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது - அக்சர் படேல்


கேட்ச்களை தவறவிட்டது போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது - அக்சர் படேல்
x

Image Courtesy: X (Twitter)

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்கள் எடுத்தார்.

டெல்லி தரப்பில் கலீல் அகமது, ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 32 ரன்னும், பவுலிங்கில் 4 ஓவரில் 19 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய கேமரூன் க்ரீனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் அக்சர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டியில் கையில் வந்த கேட்ச்களை தவறவிட்டது போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒருவேளை நாங்கள் பெங்களூரு அணியை 150 ரன்களில் சுருட்டி இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். அதேபோன்று இந்த போட்டியில் பவர் பிளேவில் நாங்கள் பேட்டிங் செய்கையில் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

இப்படி பவர்பிளே ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டால் சேசிங் செய்வது கடினமாகவே இருக்கும். 160 முதல் 170 ரன்கள் வரை இந்த மைதானத்தில் அடிக்கக்கூடிய இலக்கு தான். முக்கியமான வீரர்கள் சிலர் ரன் அவுட் ஆவதும், பவர்பிளே ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகள் விழுவதும் என இந்த போட்டி கடினமான போட்டியாக எங்களுக்கு மாறியது. எது எப்படி இருப்பினும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று பலமான அணியாக திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story