மிர்புர் பிட்ச் என்னுடைய வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது - டிம் சவுதி
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
டாக்கா,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து வங்காளதேசம் வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புர் மைதானத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களும், தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 180 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 8 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 39.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
முன்னதாக மிர்புர் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி, 2வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்தான நிலையிலும் 3வது நாளின் மதியத்திற்குள் முடிவு கிடைத்து விட்டது. வெறும் 170 ஓவர்களிலேயே இந்த டெஸ்ட் போட்டி முடிவிற்கு வந்தது. அந்த வகையில் ஒன்றரை நாளில் முடிந்த இப்போட்டியின் பிட்ச் தம்முடைய வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "இந்த பிட்ச்சை பற்றி சொல்வதற்கு எனக்கு நிறைய குறைகள் உள்ளன. இப்போட்டி வெறும் 170 ஓவர்களில் முடிந்ததே பிட்ச் எப்படி இருந்தது என்பதை காண்பிக்கிறது. இது நன்றாக இல்லை. இதில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டி இருக்கவில்லை. இது என்னுடைய கேரியரில் நான் பார்த்த பிட்ச்களில் மிகவும் மோசமானது" என்று கூறினார்.