கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க மெக் லானிங் திடீர் முடிவு
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங். ஆஸ்திரேலிய அணிக்காக 50 ஓவர், 20 ஓவர் உலக கோப்பையை வென்றுத் தந்தவர். சமீபத்தில் அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தி காமன்வெல்த் போட்டியிலும் மகுடம் சூடியது. அவர் 100 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 15 சதம், 19 அரைசதம் உள்பட 4,463 ரன்களும், 124 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 2 சதம் உள்பட 3,211 ரன்களும் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் 30 வயதான மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். 'கடந்த சில ஆண்டுகளாக இடைவிடாது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இதனால் எனது தனிப்பட்ட விஷயங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை.
இதற்காக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். எனது முடிவுக்கு ஆதரவு அளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீராங்கனைகளுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். எனது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எப்போது மீண்டும் களம் திரும்புவார் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. இந்த ஆண்டின் கடைசியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவுக்கு வந்து ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் மெக்லானிங் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.