ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; மேத்யூஸ், சன்டிமால் அபார சதம்
இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணாரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியில் நிஷன் மதுஷ்கா 37 ரன்களிலும், திமுத் கருணாரத்னே 77 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கை கோர்த்த மேத்யூஸ் - சன்டிமால் இணை சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலையை நோக்கி கொண்டு சென்றது.
சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். சதமடித்த சிறிது நேரத்திலேயே சன்டிமால் 107 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 141 ரன்கள் அடித்திருந்தபோது ஹிட் விக்கெட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
2-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை விட 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலையை பெற்றுள்ளது. சமரவிக்ரம 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன் மற்றும் கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.