மும்பைக்கு எதிரான ஆட்டம்: நடுவரின் முடிவுகளால் கடுப்பான ஆர்.சி.பி. ரசிகர்கள்


மும்பைக்கு எதிரான ஆட்டம்: நடுவரின் முடிவுகளால் கடுப்பான ஆர்.சி.பி. ரசிகர்கள்
x
தினத்தந்தி 12 April 2024 10:12 AM IST (Updated: 12 April 2024 11:41 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை - பெங்களூரு இடையேயான ஆட்டத்தில் நடுவர்களின் முடிவு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மா 38, இஷான் கிஷன் 69, சூர்யகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 26, திலக் வர்மா 16 ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இந்த போட்டியில் நடுவர்களின் செயல்பாடுகள் மும்பை அணிக்கு ஆதரவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆர்.சி.பி. அணிக்கு எதிராக நடுவர்கள் நிதின் மேனன், வினீத் குல்கர்னி மற்றும் விரேந்தர் சர்மாவின் முடிவுகள் இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டத்தில் ரஜத் படிதார் அடித்த பவுண்டரியை ஆகாஷ் மத்வால் தடுக்க முயன்றார். ஆனால் அவரின் உடல் பவுண்டரி லைனில் இருந்தபோது, பந்து அவரது தொடையில் பட்டது. இதனை 3வது நடுவராக இருந்த நிதின் மேனன், பவுண்டரி இல்லை என்று அறிவித்தார். தொடர்ந்து ஆகாஷ் மத்வால் வீசிய பந்து ஒய்டாக செல்ல, அது கள நடுவரால் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் பும்ரா வீசிய யார்க்கர் பந்து லோம்ரோரின் கால்களில் அடித்து சென்றது. அது லெக் ஸ்டம்ப்-க்கு வெளியில் சென்றது தெரிய வந்தபோது, நடுவரின் தீர்ப்பு (அம்பயர்ஸ் கால்) என்று அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் கடைசி ஓவரில் ஆகாஷ் மத்வால் வீசிய பந்து தினேஷ் கார்த்திக்கின் நெஞ்சு பகுதிக்கு வந்தது. அதனை தடுத்த தினேஷ் கார்த்திக் நோ-பாலுக்கு மேல் முறையீடு செய்ய, அதனை 3வது நடுவரால் சோதனை செய்யப்பட்டது.

மேல் முறையீட்டில் அந்த பந்து மேலே சென்றபோதும், பந்து கீழே சென்றதாக காட்டப்பட்டது. இதனை பார்த்த விராட் கோலி பவுண்டரி லைனில் நின்ற நடுவர்களுடன் ஏன் நோ-பால் இல்லை என்று வாக்குவாதம் மேற்கொண்டார். அதன்பின் 3-வது நடுவர் நோ-பால் இல்லை என்று அறிவித்தார். இதனை வர்ணனையில் இருந்தவர்கள், நடுவர்களுக்கு இன்று மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவித்துவிடலாம் என்று கிண்டல் செய்தனர். நடுவர்களின் ஒரு சார்பான முடிவு ஆர்.சி.பி. ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


Next Story