நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்...இந்தியாவின் பிளேயிங் லெவனில் மாற்றம் நிகழுமா..? - டிராவிட் பதில்
நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
பெங்களூரு,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை பெங்களூருவில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கடந்த போட்டிக்கு பின் 6 முழுமையான நாட்கள் எங்களுக்கு கிடைத்தது. அதில் நாங்கள் நன்றாக ஓய்வெடுத்தோம். குறிப்பாக ஒரு லீக் மற்றும் அரையிறுதிக்கு முன்பாக 6 நாட்கள் ஓய்வு கிடைத்தது எங்களுடைய வீரர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். ஏனெனில் நாங்கள் தொடரின் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். எனவே தற்போது விளையாடும் 11 பேர் அணியில் யார் விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்பாக நாங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் சிறந்த இடத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.