சென்னைக்கு எதிரான ஆட்டம்; சுப்மன் கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதம் - எதற்காக தெரியுமா..?
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தினால் அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில், குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருந்த வீரர்கள் மற்றும் அந்த அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய வீரர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுப்மன் கில்லுக்கு ரூ. 24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு அவர்களது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அல்லது ரூ. 6 லட்சம் (இரு தொகைகளில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக சுப்மன் கில்லுக்கு ஏற்கனவே ரூ.12 லட்சம் (சி.எஸ்.கே-வுக்கு எதிராக) அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2வது முறையாக மெதுவாக பந்துவீசிய புகார் எழுந்துள்ளதால் அவருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி மீண்டும் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை எனில் அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.