இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மசும்தர்


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மசும்தர்
x

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அமோல் மசும்தர் விரைவில் அறிவிக்கப்படுகிறார்.

புதுடெல்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் அந்த பதவியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கப்பட்டார். அதன் பிறகு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற 9-ந் தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கு முன்னதாக புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் இருந்து 3 பேர் கொண்ட இறுதிபட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டியினர் நேர்காணல் நடத்தினர். இதில் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்களான அமோல் மசும்தர் (மராட்டியம்), துஷார் அரோதி (குஜராத்), ஜோனதன் லீவிஸ் (இங்கிலாந்து) ஆகியோர் கலந்து கொண்டு தங்களது பயிற்சி திட்டங்களை எடுத்துரைத்தனர்.

இந்த மூவரில் அமோல் மசும்தர் அளித்த பயிற்சி திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததால் அவரது பெயரை புதிய பயிற்சியாளர் பதவிக்கு கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் பரிந்துரை செய்துள்ளனர். எனவே மசும்தர், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விரைவில் அறிவிக்கப்படுகிறார்.

அடுத்த ஆண்டு (2024) வங்காளதேசத்தில் 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டியும், 2025-ம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டியும் நடக்க இருப்பதால் மசும்தருக்கு 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. 48 வயதான அமோல் மசும்தர் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தென்ஆப்பிரிக்க அணியின் உதவி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.


Next Story