ஸ்மிரிதி மந்தனா- ஷபாலி வர்மா அதிரடி : இலங்கை அணியை துவம்சம் செய்தது இந்திய அணி..!!
இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பல்லேகல்லே,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று பல்லேகல்லேயில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீராங்கனைகளான ஹாசினி பெரேரா, விஷ்மி குனரத்னே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி திணறியது.
அந்த அணியில் அதிகபட்சமாக காஞ்சனா 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இலங்கை பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்து இந்த ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்-ஐ கடந்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இலங்கை பந்துவீச்சாளர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 25.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிரிதி மந்தனா 94 ரன்களுடனும் ஷபாலி வர்மா 71 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.