மஹ்மத்துல்லா அரைசதம்; வங்காளதேசம் 157 ரன்கள் சேர்ப்பு


மஹ்மத்துல்லா அரைசதம்; வங்காளதேசம் 157 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: AFP

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக மஹ்மத்துல்லா 54 ரன்கள் எடுத்தார்.

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அந்த நான்கு ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன், சவுமியா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தன்சித் ஹசன் 2 ரன்னிலும் சவுமியா சர்கார் 7 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய டவ்ஹித் ஹ்ரிடோய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் வங்காளதேச அணி 15 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து கேப்டன் ஷாண்டோ மற்றும் மஹ்மத்துல்லா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 84 ரன்னாக உயர்ந்த போது கேப்டன் ஷாண்டோ 36 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷகிப் அல் ஹசன் களம் புகுந்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மஹ்மத்துல்லா அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்னிலும், ஷகிப் 21 ரன்னில் அவுட் ஆகினர். இதையடுத்து ஜாக்கர் அலி, முகமது சைபுதீன் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக மஹ்மத்துல்லா 54 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானி, பிரையன் பென்னட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது.


Next Story