ஸ்டோய்னிஸ், பூரன் வாணவேடிக்கை : 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி


ஸ்டோய்னிஸ், பூரன் வாணவேடிக்கை : 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி
x

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.

பெங்களூரு,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டூபிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளஸ்சிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

இந்த ஜோடியில் விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்டினார். மறுமுனையில் டூ பிளஸ்சிஸ் 35 பந்துகளில் அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.

மேக்ஸ்வெல், டூபிளிஸ்சிஸ் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர். மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 79 (46) ரன்களும், கார்த்திக் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியாக இந்த ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 9 ரன்னும், குர்ணால் பாண்ட்யா (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்ததுத்து வெளியேறினர்.

அடுத்ததாக கே.எல்.ராகுலுடன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்டோய்னிஸ் 65 (30) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கே.எல்.ராகுலும் 18 (19) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து நிகோலஸ் பூரனுடன், பதோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வாணவேடிக்கை நிகழ்த்திய பூரன் 15 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து பெங்களூரு அணி ரசிகர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் 62 (18) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் பதோனி சிக்சர் அடித்து 30 (24) ரன்களில் ஹிட் விக்கெட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மார்க் வுட் 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஒவரில் உனத்கட் 9 (7) ரன்னில் ஆட்டமிழக்க போட்டி பரபரப்பானது. இறுதியில் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து லக்னோ அணி அசத்தியது.

இறுதியில் பிஷ்னோய் 3 ரன்களும், அவேஷ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் வெய்னி பர்னல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளும், கரண் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.


Next Story