சச்சின், டிராவிட் போல விராட், ரோகித்தாலும் அதை செய்ய முடியும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்


சச்சின், டிராவிட் போல விராட், ரோகித்தாலும் அதை செய்ய முடியும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்
x

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்போல விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 40 வயது வரை இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தன்னுடைய உடல் மற்றும் பிட்னஸ் அனுமதிக்கும் வரை ரோகித் சர்மா விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் 40 வயது வரை விளையாடிய சச்சின், டிராவிட் போன்ற தரத்தை அவர் கொண்டுள்ளார். தற்போது முன்பை விட பிட்னஸ் வசதிகள் இருக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் உதவி செய்கிறார்கள். அதனால் வீரர்களின் கெரியர் நீள்கிறது. விராட் கோலியும் தனது உடலை பொறுத்து விளையாடுவார். டெஸ்ட் போட்டிகள் தான் நீங்கள் விடைபெறும் கடைசி பார்மட்டாக இருக்கும்.

எனவே விராட் கோலி இன்னும் 5 வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்க்க முடியும். 2015, 2019, 2023 ஆகிய 3 உலகக் கோப்பைகளிலுமே இந்தியா அற்புதமாக விளையாடியது. கடந்த முறை ஆஸ்திரேலியா பைனலில் நம்மை விட சிறப்பாக விளையாடியது. தற்போது டி20 உலகக்கோப்பையை வென்று ருசியை பார்த்த ரோகித் சர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற அடுத்த வெற்றிகளை முன்னோக்கி இருப்பார். இப்போதெல்லாம் ஐசிசி தொடர்கள் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. எனவே உலகக் கோப்பையை வென்றால்தான் ரோகித் ஓய்வு பெறுவார் என்ற எந்த கட்டாயமும் கிடையாது" எனக் கூறினார்.


Next Story