ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20: ஷதப் கான் சாதனை !
சர்வதேச 20 ஓவர் போட்டியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் வீரர், ஒட்டுமொத்தத்தில் 7-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சார்ஜா,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 'டாஸ்' ஜெயித்த ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைம் அயுப் 49 ரன்னும், இப்திகர் அகமது 31 ரன்னும், கேப்டன் ஷதப் கான் 28 ரன்னும், அப்துல்லா ஷபிக் 23 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் ரகுமான் 2 விக்கெட்டும், பரூக்கி, முகமது நபி, ரஷித் கான், பரீத் அகமது, கரிம் ஜனாத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 116 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (21 ரன்கள்), ரமனுல்லா குர்பாஸ் (18 ரன்), முகமது நபி (17 ரன்), கேப்டன் ரஷித் கான் (16 ரன்), உமர் கானி (15 ரன்), செய்யதுல்லா அடல் (11 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. பாகிஸ்தான் தரப்பில் இசானுல்லா, ஷதப் கான் தலா 3 விக்கெட்டும், இமாத் வாசிம், ஜமான் கான், முகமது வாசிம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ஷதப் கான் ஆட்டநாயகன் விருதையும், ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நபி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த போட்டியில் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான பாகிஸ்தான் பொறுப்பு கேப்டன் ஷதப் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் வீரர், ஒட்டுமொத்தத்தில் 7-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் இதுவரை 87 ஆட்டங்களில் ஆடி 101 விக்கெட்டுகள் சாய்த்து இருக்கிறார்.
முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. தொடரை இழந்து விட்ட பாகிஸ்தான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.