கடைசி டி20 போட்டி; பரபரப்பான ஆட்டத்தில் யுஏஇ-யை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்..!


கடைசி டி20 போட்டி; பரபரப்பான ஆட்டத்தில் யுஏஇ-யை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்..!
x

Image Courtesy: @ACBofficials

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் யுஏஇ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 127 ரன்கள் அடித்தால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தனது இன்னிங்சை தொடங்கியது.

ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குர்பாஸ் 20 ரன், ஹஸ்மஸ்த்துல்லா 36 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய இப்ராகிம் ஜட்ரான் 23 ரன், ஓமர்சாய் 16 ரன், ரசூலி 2 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஹஸ்மஸ்த்துல்லா 36 ரன், நஜிபுல்லா ஜட்ரான் 28 ரன் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.


Next Story