கடைசி ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து


கடைசி ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
x

சிறப்பாக விளையாடிய கேப்டன் பட்லர் அரைசதம் அடித்தார்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் ,பேர்ஸ்டோ களமிறங்கினர்.தொடக்கத்தில் சிராஜ் வீசிய ஓவரில் பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஜோ ரூட் வந்த வேகத்தில் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார்.

அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸ் ,ராய் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.ஒரு புறம் ராய் அதிரடியாக ரன்கள் குவித்தார்.அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ராய் 41 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அடுத்து ஸ்டோக்ஸ் 27 ரன்களில் நடையை கட்டினார்.இதனால் 74 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோஸ் பட்லர் ,மொயீன் அலி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். மொயீன் அலி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் பட்லர் அரைசதம் அடித்தார்.அவருடன் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 27 ரன்களில் ஆட்டமிழந்தார் .,பட்லர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் டேவிட் வில்லே ,ஓவர்டன் ரன்கள் எடுத்தனர் . இறுதியில் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.இந்திய அணி சார்பில் பாண்டியா 4 விக்கெட்டும்,சிராஜ் ,சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 260 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது


Next Story