லங்கா பிரீமியர் லீக்: 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜாப்னா கிங்ஸ்


லங்கா பிரீமியர் லீக்: 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜாப்னா கிங்ஸ்
x

Image Courtesy: @LPLT20

ஜாப்னா கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ரீலி ரோசவ் 106 ரன்னும், குசல் மெண்டிஸ் 72 ரன்னும் எடுத்தனர்.

கொழும்பு,

5 அணிகள் இடையிலான 5வது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் காலே மார்வெல்ஸ் - ஜாப்னா கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய காலே மார்வெல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது. காலே அணி தரப்பில் அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 82 ரன்கள் எடுத்தார். ஜாப்னா தரப்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜாப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜாப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றியது.

ஜாப்னா கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ரீலி ரோசவ் 106 ரன்னும், குசல் மெண்டிஸ் 72 ரன்னும் எடுத்தனர். ஜாப்னா அணி ஏற்கனவே 2020, 2021, 2022 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story