லங்கா பிரீமியர் லீக்: சாப்மேன், விக்ரமசிங்கே அதிரடி...தம்புல்லா சிக்சர்ஸ் 179 ரன்கள் குவிப்பு


லங்கா பிரீமியர் லீக்: சாப்மேன், விக்ரமசிங்கே அதிரடி...தம்புல்லா சிக்சர்ஸ் 179 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: @LPLT20

தம்புல்லா சிக்சர்ஸ் தரப்பில் மார்க் சாப்மேன் 91 ரன், சமிந்து விக்ரமசிங்கே 62 ரன் எடுத்தனர்.

கொழும்பு,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல். போன்று பல நாடுகளில் பல்வேறு தொடர்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில்,தற்போது 5-வது சீசன் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் வனிந்து ஹசரங்கா தலைமையிலான கண்டி பால்கன்ஸ் அணியும், முகமது நபி தலைமையிலான தம்புல்லா சிக்சர்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கண்டி பால்கன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தம்புல்லா சிக்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தசுன் குணதிலகா, குசல் பெராரே ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெரேரா 0 ரன், குணதிலகா 11 ரன் அடுத்து களம் இறங்கிய பெர்ணாண்டோ 4 ரன், தவ்ஹித் ஹ்ரிடொய் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 25 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து மார்க் சாப்மேன் மற்றும் சமிந்து விக்ரமசிங்கே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது.

இறுதியில் தம்புல்லா சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 179 ரன்கள் குவித்தது. தம்புல்லா சிக்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 91 ரன்னும், சமிந்து விக்ரமசிங்கே 62 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். கண்டி பால்கன்ஸ் தரப்பில் தசுன் ஷனகா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கண்டி பால்கன்ஸ் அணி ஆட உள்ளது.


Next Story