கொல்கத்தா அபார பந்துவீச்சு...ஐதராபாத் 159 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார்.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அகியோர் களம் இறங்கினர். இதில் ஹெட் 0 ரன், அபிஷேக் சர்மா 3 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ராகுல் திரிபாதி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.
மறுபுறம் களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ரன், ஷபாஸ் அகமது 0 ரன், ஹென்றிச் க்ளாசென் 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து அப்துல் சமத் களம் புகுந்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய திரிபாதி அரைசதம் அடித்த நிலையில் 55 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சன்வீர் சிங் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து அப்துல் சமத் உடன் கேப்டன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆட உள்ளது.