கேப்டனாக இருந்தபோது சந்தித்த அதே அழுத்தத்தை இப்போதும் கோலி சந்திக்கிறார் - வாசிம் அக்ரம்
கேப்டனாக இருந்தபோது விராட் கோலியை விமர்சித்தவர்கள் தற்போதும் விமர்சிப்பதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
கராச்சி,
அனல் பறக்க நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
முன்னதாக வழக்கம் போல இந்த வருடமும் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதனால் பெங்களூரு அணி தோற்கும் போதெல்லாம் அதற்கு விராட் கோலிதான் காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் கேப்டனாக இருந்த போது விராட் கோலியை விமர்சித்தவர்கள் தற்போதும் விமர்சிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி போன்ற தனிநபரால் கோப்பையை வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் பெங்களூரு அணி 16 வருடங்களாக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் என்ன விமர்சனத்தை எதிர்கொள்கிறார்? ஒரு வீரர் 100 - 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடித்தால் அது நன்றாக இல்லையா? ஒருவேளை அதே ரன்களை வைத்து அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த விமர்சனங்கள் வருமா? கேப்டனாக இருந்தபோது சந்தித்த அதே அழுத்தத்தை இப்போதும் விராட் கோலி சந்திக்கிறார். நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது. எனவே அவரை விமர்சிப்பது தேவையற்றது நியாயமற்றது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய ஆட்டம் இருக்கிறது.
16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அவர்களின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலர்கள் பலவீனமாக இருக்கின்றனர். சிலர் பவுண்டரி அளவு சிறியதாக உள்ளதாக பேசுகின்றனர். ஆனால் 1987-ல் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடியபோது இருந்த அதே பவுண்டரி அளவு தான் பெங்களூரு மைதானத்தில் இப்போதும் இருக்கிறது. 270 ரன்கள் அடிக்கப்படும் ஐ.பி.எல். தொடரில் ஒருவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் உடனே நங்கூரமாக விளையாடுகிறார் என்று அனைவரும் சொல்கின்றனர். அதனால் இப்போதெல்லாம் நீங்கள் முதல் பந்திலிருந்தே நிற்காமல் அடிக்க வேண்டிய நிலைமையை சந்திக்கிறீர்கள்" என்று கூறினார்.