விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பி ரன்கள் அடிக்க வேண்டும் - ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான்

Image Courtesy: AFP
நான் கோலியின் தீவிர ரசிகன் , அவர் பார்முக்கு திரும்பி மீண்டும் ரன்கள் அடிக்க வேண்டும் என ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான் கூறியுள்ளார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் கேப்டன் கோலி 35 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் நான் கோலியின் தீவிர ரசிகன் என்றும் அவர் பார்முக்கு திரும்பி மீண்டும் ரன்கள் அடிக்க வேண்டும் என ஹாங் காங் கேப்டன் நிஜாகத் கான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
நான் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடினார். அவர் பார்முக்கு திரும்பி மீண்டும் ரன்கள் அடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். டி-20 போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
கடந்த முறை ஆசிய கோப்பை (2018) தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை நெருங்கி வந்து தான் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் எப்போது ஒரு பவுலர் சிறப்பாக பந்து வீசுவார், ஒரு பேட்ஸ்மேன் விரைந்து ரன் சேர்ப்பார் என்பது நமக்கு தெரியாது.
கடந்த காலங்களில் வலுவான அணிகள் அசோசியேட் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளன. நேர்மறையான எண்ணத்துடன் இந்த போட்டியை நாங்கள் அணுக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.