தோனி பொறுப்பேற்றவுடன் உலகக் கோப்பையை வென்றார்..அதற்காக எல்லோருக்கும் அது நடக்குமா...! - அஸ்வின் கலகல


தோனி பொறுப்பேற்றவுடன் உலகக் கோப்பையை வென்றார்..அதற்காக எல்லோருக்கும் அது நடக்குமா...! - அஸ்வின் கலகல
x

தோனி பொறுப்பேற்றவுடன் வந்து உலகக் கோப்பையை வென்றார் என்பதற்காக எல்லோருக்கும் அது நடக்கும் என்று அர்த்தம் இல்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி உள்ளார்.

சென்னை

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக தோனி கேப்டனாக இருந்தபோது 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதுதான்.

அதன்பிறகு ஒரு சில முறை கோப்பைக்கு மிகவும் நெருக்கமாக வந்தது இந்திய அணி. 2014 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக தோல்வியடைந்தது தோனி தலைமையிலான அணி.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது விராட் கோலி வழிநடத்திய அணி. அதன்பிறகு, 2019 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி. இந்த இறுதி போட்டி தோல்விகள் மட்டுமல்லாமல், 2015 ஒருநாள் உலகக் கோப்பை, 2016 20 ஓவர் உலகக் கோப்பை. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, 2022 20 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதிப் போட்டியில் தோற்றது அந்த அணி. சில தொடர்கள் சிறப்பாக சென்றிருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியிருந்தது இந்திய அணி.

இந்திய அணியின் செயல்பாடு முற்றிலும் மோசமாக இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் கடந்த சில தொடர்களாக கோப்பை வெல்ல முடியாமல் இருப்பதால், கேப்டன்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்த விமர்சனங்களை மறுத்திருக்கிறார் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அஷ்வின், ஐசிசி கோப்பைகள் வென்றதன் அடிப்படையில் ஒரு வீரரை மதிப்பிடக் கூடாது என்றும், எந்த ஒரு வீரருக்கும் நேரம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் அஷ்வின்.

அதுமட்டுமல்லாமல், இந்திய ஜாம்பவான் சச்சினை குறிப்பிட்டு, அவருக்கே உலகக் கோப்பையை வென்று தன் கனவை நிறைவேற்ற ஆறு வாய்ப்புகள் தேவைப்பட்டது என்று கூறியிருக்கிறார்

அஷ்வின்."ஒரு வீரர் இதை வெல்லவில்லை, அதை வெல்லவில்லை என்று சொல்வது எளிதான விஷயம். 1983 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தியா எதையும் வெல்லவில்லை.

ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரே 1992, 1996, 1999, 2003, 2007 என ஐந்து உலகக் கோப்பைகளில் பங்கேற்றார். அவை எதையுமே அவர் வெற்றி பெறவில்லை. 2011ல் தான் அவர் எதிர்பார்த்த அந்த உலகக் கோப்பையை அவரால் வெல்ல முடிந்தது. ஒரு உலகக் கோப்பையை வெல்ல, அவருக்கு 6 உலகக் கோப்பை தொடர்கள் தேவைப்பட்டது.

இன்னொரு ஜாம்பவான் எம்எஸ் தோனி உலகக் கோப்பைகளை தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே வென்று விட்டார் என்பதற்காக, அது அனைவருக்குமே நடந்துவிடும் என்பதில்லை.

கோலி, ரோகித் இருவரும் 2007 உலகக் கோப்பையில் வெல்லவில்லை. 2011 தொடரில் ரோஹித் விளையாடவில்லை. கோலி மட்டுமே 2011, 2015, 2019 மூன்று தொடர்களிலுமே விளையாடி வருகிறார். இப்போது 2023 தொடர், அவருடைய நான்காவது உலகக் கோப்பையாக இருக்கப்போகிறது. அவர் ஐசிசி தொடரை வெல்லவில்லை என்கிறார்கள்.

2011ல் உலகக் கோப்பை வென்றிருக்கிறார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறார். அந்தத் தொடரை ரோகுத் சர்மாவும் வென்றிருக்கிறார். அதனால், இவர்களுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு தொடர்களில் விளையாடியிருக்கிறார்கள்" என்று அவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் அஸ்வின்


Next Story