ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி 3 லீக் ஆட்டம், சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2 ஆட்டம் என்று தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வீறுநடை போடுகிறது
பெனோனி,
15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெனோனியில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி 3 லீக் ஆட்டம், சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2 ஆட்டம் என்று தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வீறுநடை போடுகிறது. பேட்டிங், பந்து வீச்சு என்று எல்லா துறையிலும் வலுவாக விளங்குகிறது.
ஜூயன் ஜேம்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி லீக்கில் 2 வெற்றியும், ஒரு தோல்வியும் (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து நம்பிக்கையுடன் உள்ளது. சமீபத்தில் நடந்த 3 நாடுகள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே இந்த போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.