ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியீடு


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியீடு
x

Image Courtesy: @ICC

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது.

கேப்டவுன்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. அதன்படி குரூப் ஏ-ல் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து அணிகளும், குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும், குரூப் சி-ல் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகளும், குரூப் டி-ல் பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் முன்னேறி உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் கடைசி இடத்தை பிடித்த அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ மற்றும் டி அணிகள் ஒரு பிரிவாகவும், குரூப் பி மற்றும் சி அணிகள் ஒரு பிரிவாகவும் மோத உள்ளன.

சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 2 ஆட்டங்களில் ஆடும். எடுத்துக்காட்டாக குரூப் ஏ-ல் முதலிடம் பிடித்த அணி குரூப் டி-ல் 2வது மற்றும் 3வது இடம் பிடித்த அணிகளுடன் மோதும். குரூப் பி-ல் 3வது இடம் பிடித்த அணி குரூப் சி-ல் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுடன் மோதும்.

அதன்படி குரூப் ஏ-ல் முதல் இடம் பிடித்த இந்திய அணி குரூப் டி-ல் 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்த நியூசிலாந்து, நேபாளம் அணிகளுடன் மோத உள்ளது. இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் நாளையும், இந்தியா - நேபாளம் ஆட்டம் பிப்ரவரி 2ம் தேதியும் நடைபெற உள்ளன.

சூப்பர் 6 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். அரையிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 6 மற்றும் 8ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி பிப்ரவரி 11ம் தேதியும் நடைபெறுகின்றன.


Next Story