உள்ளூர் தொடரில் அசத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஜெய்ஷா


உள்ளூர் தொடரில் அசத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஜெய்ஷா
x

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றன. முன்பு ரஞ்சிக்கோப்பை, சையத் முஷ்டாக் அலி தொடர் போன்ற உள்ளூர் தொடர்கள் இந்திய அணித்தேர்வுக்கு அடிப்படை அளவுகோலாக கருதப்பட்டன.

இருப்பினும் ஐபிஎல் வந்தது முதல் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட இந்திய வீரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாட வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதே போல ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த கேட்ச் அல்லது சிக்சர்கள் அடித்தால் அதற்கு பரிசுத்தொகை மற்றும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் பெரிதாக எந்த பரிசும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கே இந்திய அணியில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இந்நிலையில் அதை மாற்றுவதற்காக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான சீனியர் ஜூனியர் தொடர்களுக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளும் பரிசுத்தொகையும் கொடுக்கப்படும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வரை ரஞ்சிக்கோப்பை போன்ற தொடர்களில் இறுதிப்போட்டி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனுக்கு மட்டுமே பரிசுகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் லீக் முதல் பைனல் வரை அனைத்து போட்டிகளிலும் விருதுகள் மற்றும் அதற்கு தகுந்த பணத்தை பரிசாக வழங்கப்படும் என்று ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது இந்தியாவில் நடக்கும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிர் தொடர்களுக்கு பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஆடவர் சீனியர் விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்களுக்கும் இந்த பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படும் என்றும் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Next Story