நாங்கள் ஆடிய ஆசியகோப்பைகளில் இது மிகவும் சிறப்பான ஒன்றாகும் - தசுன் ஷனகா


நாங்கள் ஆடிய ஆசியகோப்பைகளில் இது மிகவும் சிறப்பான ஒன்றாகும் - தசுன் ஷனகா
x

Image Courtesy: AFP 

நாங்கள் ஆடிய ஆசியகோப்பைகளில் இது மிகவும் சிறப்பான ஒன்றாகும் என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), ஆப்கானிஸ்தான், இலங்கை (பி பிரிவு) அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. வெற்றியே பெறாத ஹாங்காங், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

சூப்பர்4 சுற்றில் இலங்கை அணி 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்து 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், பாகிஸ்தான் அணி (2 வெற்றி, ஒரு தோல்வி) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இந்தியா (ஒரு வெற்றி, 2 தோல்வி) 2 புள்ளியுடன் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தன.

பாகிஸ்தான்-இலங்கை மோதல் இந்த நிலையில் ஆசிய கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு அந்த அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி கண்டு கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. தற்போது இலங்கை அணி ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் விளையாடுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் (சூப்பர்4 சுற்று) இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இந்நிலையில், நாங்கள் விளையாடிய ஆசிய கோப்பைகளில் இந்த தொடர் மிகவும் சிறப்பானது என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"ஒரு அணியாக, நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளோம், பாகிஸ்தான் மிகச் சிறந்த அணி, அனைத்து போட்டிகளும் இறுதிவரை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவதை எதிர்நோக்குகிறோம், இந்த தொடரை திரும்பி பார்க்கும் போது இது எங்களுக்குக் கிடைத்த ஆசியக் கோப்பைகளில் இது சிறந்த ஒன்றாகும், மேலும் நாங்கள் இறுதிப் போட்டியை எதிர்நோக்குகிறோம், "என்று அவர் கூறினார்.


Next Story