சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - ரஷித் கான்


சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - ரஷித் கான்
x

Image Courtesy: @ICC / @ACBofficials

பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்கள் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நன்றாகத் தெரியும்.

பவர் பிளேவில் தைரியமாக விளையாடும் குர்பாஸ், பந்துவீச்சில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுக்கும் பரூக்கி போன்றோர் மிகவும் முக்கியம். எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் இரண்டு போட்டியில் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். இன்று மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய நேரம் கிடைத்தது.

இங்கு வருவதற்கு முன்பு நாங்கள் எங்களுடைய நாட்டில் ஒரு போட்டி தொடரில் விளையாடினோம். மேலும் எல்லோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். வெளிநாட்டு லீக்குகள் விளையாடுவதின் வசதி இதுதான். நீங்கள் உலகெங்கும் விளையாடுவதால் உங்களுக்கு அங்குள்ள நிலைமைகள் தெரியும். நபி மற்றும் குர்பாஸ் இருவரும் செயின்ட் லூசியாவில் விளையாடுகிறார்கள்.

அடுத்து நாங்கள் அங்கு செல்கிறோம். அவர்கள் எங்களுக்கு அங்குள்ள நிலைமைகள் குறித்து தெளிவாகச் சொல்லுவார்கள். இது எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் நாங்கள் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story